பாசிச எதிர்ப்பாளர்களை விஜய் நையாண்டி செய்துள்ளார்- திருமாவளவன்
பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என புரிந்து கொள்வதா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. மாநாட்டில் பேசிய விஜய், “ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட சாயத்த பூசி, ‘பாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை,-பெரும்பான்மை என பயம் காட்டுகிறார்கள். நாம் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா?” எனக் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்தியாவை பொறுத்தவரையில் பாசிசம் என்றால் பாஜக கோட்பாடு தான். ஆகவே ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். விஜயோ "அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா " என்று ஃபாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்துவதாலும்; "பிளவுவாதத்தை எதிர்ப்போம்" என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது” என்றார்.