×

“விஜய் ஆட்சிக்கு வர ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன்

 

காஞ்சிபுரம் புத்தேரி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி விமல்ராஜ் என்பவரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அவருக்கு விசிக நிர்வாகிகளும் தொண்டர்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின் புது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிர்வாகியின் பெற்றோர்கள் புகைப்படத்தினை திறந்து வைத்தார்.அங்கு இருந்த விசிக நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு முத்தழகன் பெயர் சூட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “எல்.ஐ.சி நிறுவனத்தின் வலைதளத்தை பாஜக முழுமையாக இந்திக்கு மாற்றி உள்ளது. பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்தே இது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறது. பாஜக திட்டமிடே வேண்டுமென்றே இந்தியா முழுவதும் இந்தி அல்லாத பிற மொழிகள் பேசும் மாநிலங்களை நசுக்கும் வகையில் தொடர்ந்து இந்தி திணிப்பு,சமஸ்கிருத திணிப்பு போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. எல்.ஐ.சி நிறுவனத்தின் வலைதளத்தை முழுமையாக இந்திக்கு மாற்றி இருப்பதை மிக வன்மையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. இந்தி பேசாத பிற மாநிலத்தவர்களும் பயன்பெறும் வகையில், அதனை மீண்டும் உடனடியாக வழக்கம் போல் ஆங்கிலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். நாங்கள் பதவியேற்று நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சுற்றறிக்கை முழுவதும் இந்தியில் தான் இருந்தது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் ஆங்கிலத்தையும் இணைந்தார்கள்.

 

தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள், தமிழ்நாட்டு நிறுவனங்கள் மீது ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்த அமலாக்கத்துறை சோதனையை பாரதிய ஜனதா கட்சி ஏவி வருகிறது. இனி கூட்டணி குறித்து யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆட்சிக்கு வர ஆசைப்படலாம். ஆனால் முடிவு எடுப்பவர்கள் மக்கள்தான். அனைத்தையும் தீர்மானிக்கும் களம் தேர்தல்” என்றார்.