தமிழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இடைநீக்கம்- திட்டமிட்டு பழிவாங்கும் செயல்: திருமாவளவன்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ( திசம்பர்12), திடுமென அவரைப் பணியிடை நீக்கம் செய்து மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ( திசம்பர்12), திடுமென அவரைப் பணியிடை நீக்கம் செய்து மேதகு ஆளுநர் ஆர்.என். இரவி அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
2017 - 2018 ஆண்டில் நடந்த நாற்பது பேருக்கான பேராசிரியர் பணிநியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றாலும், அவர்களின் "தகுதிகாண் பருவம்" நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் (சிண்டிகேட்) ஒப்புதலுடன் அவர்களுக்கான பணிநிரந்தர ஆணையை வழங்கியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்னும் நிபந்தனையுடன் தான் இந்த ஆணையை அவர் வழங்கியுள்ளார். இந்த பணிநிரந்தர நடவடிக்கைக்கு எதிராகவே ஆளுநர் அவர்கள் துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார். பணிநியமனத்துற்கும் தற்போதைய துணைவேந்தருக்கும் தொடர்பில்லை. தகுதிகாண் பருவம் நிறைவடைந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் முழுமையான ஒப்புதலுடன்தான் பணிநிரந்தரம் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது அதற்கேறப பணிநிரந்தர ஆணை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்கிற நிபந்தனையுடன்தான் அவ்வாணையை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், ஆட்சிமன்றக் குழுவின்ஒப்புதலைப் பெறாத ஒரு விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆளுநர் கோரிய விளக்கம் அளிக்கவில்லை என்று அவர்மீது குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆளுநர் அவர்களின் இந்த நடவடிக்கை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும். முனைவர் திருவள்ளுவன் அவர்கள் பல்கலைக் கழகத்தில் இயங்கும் சில சாதியவாத ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் நேர்மைத் திறத்தோடு துணிவாக தனது கடமைகளை ஆற்றினார் என்பதும்; திராவிட இலக்கியங்கள் மற்றும் பொதுவுடைமை சிந்தனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, பல்வேறு நிகழ்வுகளைப் பல்கலைக் கழக வளாகத்தில் ஒருங்கிணைத்தார் என்பதும்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கொண்டு காணொளி வழியாக (வீடியோ கான்ஃபரன்ஸ்), பொதுவுடைமை 'கவிஞர் தமிழ்ஒளி' அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்ததுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார் என்பதும்; ஆளுநரின் விருப்பறிந்து துணைவேந்தர் இயங்கவில்லை என்பதும் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்குக் காரணமெனத் தெரியவருகிறது.
திராவிட அரசியலுக்கும் திமுக அரசுக்கும் ஆதரவாகவே துணைவேந்தர் செயல்படுகிறார் என அவருக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து கோள்மூட்டியதையடுத்து, ஆளுநர் அவர்கள் ஆத்திரம் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். எனவே, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட்டு, துணைவேந்தர் மீதான நடவடிக்கையை அவர் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.