×

”அடிப்படை அறிவு இல்லாமல் விஜய் அரசியல் கட்சி தொடங்கமாட்டார்”- திருநாவுக்கரசர்

 

அரசியலிலும் சினிமாவிலும் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி இருக்கும் என்ற நிலை இருப்பதால் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதால் அவருக்கு யாரும் அறிவுரை சொல்ல தேவையில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர், “தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது பயணம் வெற்றிகரமாக வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன். திமுக, பாஜக, காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் ஆகியவை கட்சி தொடங்கி ஒரு வருஷம், இரண்டு வருஷம் அல்ல பல வருடங்கள் ஆகிறது எனவே புதிதாக கட்சி தொடங்கியவர்களை பார்த்து திமுக உட்பட அனைத்து கட்சிகளும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. யாரும் பயப்படவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு உள்ளது. கட்சி தொடங்கிய பலர் வென்றதாக சரித்திரம் இல்லை, தோற்றதாகவும் சரித்திரம் இல்லை. அவர்களுடைய கொள்கை கோட்பாடுகள், பொதுமக்கள் செல்வாக்கு, அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் அது எவ்வாறு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை பொறுத்துதான் வெற்றி பெறுவது தோல்வி அடைவதும் இருக்கும். அரசியலில் யாரும் எளிதாக வெற்றி பெற முடியாது, அதற்காக அவர்களை வரக்கூடாது என்று சொல்லவும் முடியாது.


சமீப காலமாக இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறை என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனித்து ஆட்சி செய்த மோடியை தற்போது கூட்டணி ஆட்சி தான் நடத்தி வருகிறார். அது போன்று இந்தியாவின் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது. இதற்காக 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வரும் என்று கூற முடியாது. பாஜக அரசிடமிருந்து மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்தை விட்டு என்றைக்கும் விலக மாட்டார்கள். தற்போது சில விஷயங்களை பாஜக செய்ய முடியாததற்கு காரணம் அவர்கள் உள்ள கூட்டணி கட்சியினால் தான். நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பாஜக கூறும் அனைத்திற்கும் சரி என்று கூற மாட்டார்கள். பாஜக நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவதற்கு இவர்கள் இருவரும் விட மாட்டார்கள். பேலன்ஸ் செய்து தான் மோடி இந்த அரசை நகர்த்த முடியும்.

சினிமாவிற்குள் அரசியல் உள்ளது. வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னிவெடி இருக்கும் துறை. எனவே சினிமா துறையில் இருந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் அவர் நன்றாக சிந்தித்து தான் வந்திருப்பார். அவருக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும், அவரது கருத்துக்களை கூறட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம். விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை.” என்றார்.