×

இது கூட்டணிக்கான அழைப்பாக மாறலாம்.. விசிக மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஜெயக்குமார் பதில்.. 

 

விசிக-வின் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்த அதிமுக தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் மதுஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. மதுஒழிப்பில் விருப்பமுள்ள அதிமுக உள்பட எந்தக்கட்சியினரும் விசிக மாநாட்டில் பங்கேற்கலாம் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக அதிமுக இருப்பதாலும், 50 ஆண்டுகள் பழமையான கட்சி, 31ஆண்டுகள் ஆண்ட கட்சி என்ற அடிப்படையிலும் விசிக சார்பில் அழைப்பு வந்திருக்கலாம். இது கொள்கைக்கான அழைப்பாக உள்ளதாகவும், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புகள் உள்ளது. 

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கலக்கத்தில் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எப்பொழுது மாநாடு நடத்துவார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கும், அரசியலை பொருத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்த எதிரியும் இல்லை. அதனால் விசிகவுக்கும் அதிமுகவிற்கு கொள்கை ரீதியாக பெரிய முரன்பாடுகள் இல்லை. திருமாவளவன் அதிமுகவிற்கு எதிரியும் இல்லை.  அதனால் மாநாட்டிங் பங்கேற்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்.” என்று தெரிவித்தார். மேலும், பாமக, பாஜகவிற்கு அழைப்பு இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அந்த கட்சி தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.