×

மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்..!

 

மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில், குகி தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு குழந்தை மற்றும் இரு பெண்களின் உடல் கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த நவ. 11ஆம் தேதி ஜிரிபாமில் வன்முறையில் ஈடுபட்ட குகி தீவிரவாதிகள் மீது சிஆர்பிஎஃப் போலீஸார் தாக்குதல் நடத்தினர். இதில், குகி சமூகத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே, அன்றைய தினம் ஆயுதங்களுடன் மைதேயி சமூக மக்களின் வீடுகளுக்குள் புகுந்த குகி தீவிரவாதிகள் 3 பெண்கள், 3 குழந்தைகள் என 6 பேரை கடத்திச் சென்றனர். தொடர்ந்து, வெவ்வேறு 3 நாள்களில் 6 பேரின் சடலங்களும் மணிப்பூர் - அஸ்ஸாம் எல்லையில் மீட்கப்பட்டது. 


அஸ்ஸாமில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 பேரின் உடல்களும் உடல் கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்களின் உடல் கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. 3 வயது சிறுவன் சிங்கேய் நங்கன்பா சிங், அவரது தாய் லைஷ்ராம் ஹெய்டோம்பி தேவி(வயது 25) மற்றும் அவரது பாட்டி யுரெம்பம் ராணி தேவி(வயது 60) ஆகியோரின் உடல்களில் ஆழமான சிதைந்த காயங்கள் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு காயம் இருந்ததாகவும், 4 செ.மீ. ஆழமும், 3 செ.மீ. அகல காயம் வலது மார்புப் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறுவனின் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், சிறுவனின் தாயின் உடலில் 4 இடங்களிலும், பாட்டியின் உடலில் 5 இடங்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேரின் உடல் கூறாய்வு அறிக்கைகல் இன்னும் வெளியாகவில்லை.