×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்.. 

 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 

 அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கடற்கரை ஓரம் அமைந்துள்ளதால் இது மற்ற தலங்களைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடை பெற்றாலும் மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித்திருவிழா மிகவும் புகழ்பெற்றது.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  பிற மாநிலங்களில் இருந்தும்  வருகை தந்து ஆவணித் திருவிழாவில்   கலந்து கொள்வது வழக்கம். 

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  ஆவணி திருவிழா   இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக  அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.  பின்னர் 1.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 2 மணிக்கு உதமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.  அதை தொடர்ந்து கொடிமரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்கி முருகனை வணங்கினர்.

அதன் பின்னர் கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் தர்ப்பை புல் கொண்டு அலங்கரிக்கட்டு  விஷேச சோடச தீபாராதனையும் நடைபெற்றது. வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்க உள்ளனர். 


 இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஐந்தாம் நாள்  குடவரைவாயில்  தீபாராதனையும், ஏழாம் நாள் (30.08.2024) அன்று முருகப் பெருமான்சிவப்பு சாத்தி கோலத்திலும் , எட்டாம் நாளில் (31.08.2022) பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி காட்சி கொடுக்க உள்ளார் . செப்டம்பர் 2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.  கோவில் நிர்வாகம் சார்பில் வரக்கூடிய பக்தர்களின் வசதிகளுக்காக  கோவில்  வளாகத்தில் கூடுதலாக கழிப்பறை  வசதிகளும் , 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப் பட்டுள்ளது. மேலும்  பக்தர்களின் பாதுகாப்பிற்காக  300 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.