×

அதிகாலை சிறப்பு காட்சி ஒளிபரப்பு ஏன்? - திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்!  

 

தீபாவளிய்னறு தமிழ்நாடு அரசின் சிறப்பு காட்சிகள் தொடர்பான விதிமுறைகள் இந்தி திரைப்படத்துக்கு பொருந்தாது என நினைத்து காலை சிறப்பு காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் ஒளிபரப்பிவிட்டதாக திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை,ஈரோடு,நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் ஆகிய சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், “தனது திரையரங்கில் தீபாவளியன்று தமிழக அரசின் சிறப்பு காட்சிகள் தொடர்பான விதிமுறைகள் ஹிந்தி திரைப்படத்துக்கு பொருந்தாது என நினைத்து காலை சிறப்பு காட்சியை எங்கள் திரையரங்கத்தினர் ஒளிபரப்பிவிட்டனர். நானும் மனிதன் தான், 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது. 10 சதவீதம் தவறு இருக்கதான் செய்யும். நல்ல பெயருடன் வெளியே செல்ல முடிவெடுத்து இம்முடிவை அறிவித்து வெளியேறுகிறேன்.

சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிது படுத்திருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறேன். இப்பதவியை வைத்து எனக்காக ஏதும் செய்து கொள்ளவில்லை. திரையரங்கை ஒரு வருஷத்துக்கு முன்னாடியே என் மகன்களிடம் ஒப்படைத்து விட்டேன். எங்கள் ஐடி டீம் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் செய்துவிட்டனர்.   ஜப்பான், ஜிகர்தண்டாவுக்கு சிறப்பு காட்சி தொடர்பாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஹிந்தி படத்துக்கு குறிப்பிடபடவில்லை, அதனால் திரையிட்டுவிட்டனர். அதற்கு நான்  பொறுப்பேற்கிறேன், எனவே இந்த பொறுப்புகளில் இருந்து வெளியேறுகிறேன்” என்றார்.