×

விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் விடியல் அரசு - தமிழக பாஜக கண்டனம்! 

 

விவசாயத்தையும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வையும் மீட்டெடுக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி எக்காலத்திலும் விவசாயிகளின் நலனைப் பற்றி பேச துளியும் தகுதியற்றவர் என தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சுமார் 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் கடந்த 2021-இல் மட்டும் இலவச விவசாய மின் இணைப்புகள் கோரி கிட்டதட்ட 4.54 லட்சம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு அவை நிலுவையில் உள்ள நிலையில், திமுக  ஆட்சிக்கு வந்தது முதல் வருடாவருடம் வழங்கும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது 2021-22 இல் 1,00,000 இணைப்புகளும், 2022-23 இல் 50,000 இணைப்புகளும், 2023-24 இல் 50,000 இணைப்புகளும், 2024-25 இல் வெறும் 15,000 இணைப்புகள் மட்டுமே வழங்க அரசு அனுமதித்துள்ள நிலையில், இலவச மின்சாரத்தை நம்பி விண்ணப்பித்திருந்த தமிழக விவசாயிகள், இந்த திராவிட மாடல் அரசின் அலட்சியப்போக்கால்  பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

“நானும் டெல்டாக்காரன் தான்” என பொதுமேடையில் வெட்டி வீராப்பு காட்டும் நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே,  தமிழகத்தில் உள்ள ஏராளமான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்படாமல் கிடக்கும் பட்சத்தில் தமிழக விவசாயிகளின் ஒரே நம்பிக்கை ஊற்றாக இருப்பது கிணறுகளும் மோட்டார்களும் தான். அதையும் தட்டிப்பறிப்பது போல இலவச மின்சார இணைப்புகளைக் குறைப்பது ஏன்? சீரமைக்கப்படாத நீர்நிலைகளால் வெள்ளத்தில் மூழ்கும் பயிர்கள், மின் இணைப்புகள் வழங்காததால் நீரின்றி வாடும் பயிர்கள் என தத்தளிக்கும் தமிழக விவசாயிகளின் கண்ணீரில் உங்களுக்கு அப்படி என்ன ஒரு ஆனந்தம்?

LIC-யின் சாதாரண தொழில்நுட்ப குறைபாடைக் கண்டு கொதித்தெழும் நீங்கள், சமூகத்தின் முதுகெலும்பான விவசாயப் பெருமக்களின் துயரத்தைக் கவனிக்க மறுப்பது ஏன்? -அதுசரி நடு வயற்காட்டில் சிமெண்ட் ரோடு போட்டு விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிய ஆய்வு நடத்திய உங்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? எனவே, உங்கள் திராவிட மாடல் ஆட்சியில் தினந்தினம் கருகிக் கொண்டிருக்கும் விவசாயத்தையும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வையும் மீட்டெடுக்க தவறிய நீங்கள், இனி எக்காலத்திலும் விவசாயிகளின் நலனைப் பற்றி பேச துளியும் தகுதியற்றவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.