சந்தனக்கூடு திருவிழாவிற்கு சந்தனக்கட்டைகளை வழங்குவதற்கான அரசாணை - முதலமைச்சர் வழங்கினார்
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது. அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.11.2024) முகாம் அலுவலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை நிருவாக அறங்காவலர் திரு. சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் திரு. சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.