மெட்ரோ ரயில் பணிக்காக பனகல் பார்க் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட பணிகள்,பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ இரயில் நிலையத்தின் நுழைவு/ வெளியேறும் அமைப்புக்குண்டான கட்டுமான பணிகள் வெங்கடநாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 25.11.2024 முதல் 01.12.2024 வரை 07 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட
உள்ளன.
வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக. அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.
உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.