×

குண்டும் குழியுமான சாலையால் கவரப்பேட்டையில் 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்

 

கவரைப்பேட்டை கூட்ரோடு சந்திப்பில்  மேம்பால பணிகளால் 3 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து ஆந்திரா வழியே வடமாநிலங்களை இணைக்கக்கூடிய பிரதான சாலையாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கவரைப்பேட்டையில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சாலையின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை காரணமாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்கி ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. நேற்றும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. 

சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் கவரைப்பேட்டையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதன் காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினரும் சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி திணறி ஊர்ந்து செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் தனியார் சுங்க கட்டண நிர்வாகம் உடனடியாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.