×

ரயில்கள் தாமதம் : சென்ட்ரலில் காத்துக்கிடக்கும் பயணிகள்..

 

கவரப்பேட்டை இரயில் விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில்  நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  மைசூரு- தர்பங்கா பாகமதி விரைவு ரயில் இரவு 8.30 மணியளவில் பொன்னேரியை கடந்து கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே  வந்தபோது  மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனுக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரயில் வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டன.   20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 18 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  அத்துடன்  கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் பல்வேறு ரயில்கள் தாமதமாக வருகின்றன.  மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் 5 மணி நேரம் வரை தாமதமாக வருவதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாகவே இயக்கப்படுகின்றன. 

இதனால் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  ரயில்களின் புறப்பாடு தாமதமாகிக் கொண்டே செல்வதால் ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ரயில்கள் இயக்கம் பற்றிய உரிய தகவல்களை ரயில்வே அதிகாரிகள் கூறுவது இல்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கம், அசாம் செல்லும் பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.