×

போக்குவரத்து துறைக்கு ரூ.18,178.81 கோடி கடன்... ஆனா டிக்கெட் விலை இங்கே தான் குறைவு

 

அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்துகளுக்கான கட்டணம் தொடர்ந்து குறைவாகவே இருப்பதாக போக்குவரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேருந்துகளுக்கான திருத்தி அமைக்கப்பட்ட கட்டணம் கடந்த 2018 ல் கடைசியாக அமல்படுத்தப்பட்டதாகவும் , அதேசமயம் அண்டை மாநிலங்களான கர்நாடகாவை பொருத்தமட்டில் 2020ல் , ஆந்திராவில் 2022-ல் பேருந்துக்கான கட்டணம் செலவினங்களுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில் புறநகர் பேருந்துகளை பொருத்தமட்டில் ஒரு கிலோமீட்டருக்கு சாதாரண பேருந்துகளில் 58 பைசா ஆகவும், சொகுசு பேருந்துகளில் 75 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 85  பைசாவாகவும், அதிநவீன சொகுசு பேருந்துகளில் 100 பைசாவாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் ஆந்திராவைப் பொருத்தமட்டில் சாதாரண பேருந்துக்கு 102 பைசாவாகவும் , சொகுசு பேருந்துக்கு 125 பைசாவாகவும் , அதிநவீன சொகுசு பேருந்துக்கு 162 பைசாவாகவும் வசூலிக்கப்படுகிறது. இது தமிழகத்தை காட்டிலும் கிலோமீட்டருக்கு 44 முதல் 60 பைசா வரை அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் கர்நாடகவை பொருத்தமட்டில் சாதாரண பேருந்துக்கான கட்டணம் 66 பைசாவாகவும், சொகுசு பேருந்துக்கான கட்டணம் 123 பைசாவாகவும், அதிநவீன சொகுசு பேருந்துக்கான கட்டணம் 145 பைசாவாகவும் வசூலிக்கப்படுகிறது. இது தமிழகத்தை காட்டிலும் கிலோமீட்டருக்கு 8 முதல் 45 பைசா வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகரப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே பேருந்து சேவை வழங்கப்பட்ட வருவதாகவும் தமிழகத்தை பொறுத்தமட்டில் வாகன கொள்முதல் கடன் 589.76 கோடியாகவும், குறுகிய காலகடன் 5981. 82 கோடியாகவும், நடைமுறை மூலதனத்திற்கான பருவ கடன் 11607.23 கோடி என மொத்தம் 18178.71 போடி ரூபாய் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.