×

கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது தான் கலைஞரின் நாணயமான ஆட்சி- டி.ஆர்.பி.ராஜா

 

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தனது மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி ஆலையை ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம் அமைக்கிறது. பொன்னேரி அருகே ஓம்ரான் நிறுவனம் அமைத்துள்ள மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரின் ஜப்பான் சுற்றுப் பயணத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஓராண்டு காலத்தில் ஆலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆகியவற்றில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ரூ. 51,000 கோடி மதிப்பில் முதலீடுகளுக்கான திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டப்பட உள்ளது கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது தான் நாணயமான ஆட்சி, கலைஞரின் நாணயமான ஆட்சி நடக்கிறது அதன் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். 

19 நிறுவனங்களில் ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கு துவக்க விழாவும் நாளை நடைபெற உள்ளது. ஒப்பந்தம் மட்டும் போட்டு கோடிகளில் முதலீடு வந்துவிட்டது என கூறும் ஆட்சி இது அல்ல.. அனைத்து முதலீடுகளையும் தொடர்ந்து கண்காணித்து இன்றைக்கு அந்நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை சாத்தியப்படுத்தியுள்ளோம். முதல்வரின் அமெரிக்க பயணத்தை விமர்சனம் செய்வதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை” என்றார்.