×

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்- டிஆர்பி ராஜா

 

ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் தொழில்துறை மூலமாக மட்டுமே 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளன. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின. மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும். திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும். உலக முதலீட்டாளர்களை சந்திக்க விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவிருக்கிறார்” எனக் கூறினார்.