×

முதலமைச்சரை நம்பி வந்து.. விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிபோனது - இபிஎஸ் கடும் சாடல்..!

 

முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருப்பதாக  எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள்  நேற்று நடைபெற்றன.  சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதால்  சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.  அதிலும்  வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 230 பேருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்பட்டது. பலரும் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக  மயக்கமடைந்து கீழே விழுந்தனர். போதிய தண்ணீர், உணவு கிடைக்காமலும் பலர் தவிப்புக்கு ஆளாகினர்.  40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாகத்தான் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடினர். இத்தனை லட்சம் மக்கள் அங்கு கூடுவார்கள் என்பதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிரிழப்புகளை அரசு தடுத்திருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். விலைமதிக்க முடியாத உயிர்கள் போயிருக்கின்றன. இது அரசின் செயலற்றதன்மை, கையாலாகாத தன்மையை காட்டுகிறது. இதே விமான சாகச நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆண்டுகொண்டிருப்பதால் மக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இனியாவது திமுக அரசு இப்படிப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சியை நடத்தும்போது முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான முழு பொறுப்பையும் ஸ்டாலின்தான் ஏற்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.