×

ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் திமுக அரசு- டிடிவி தினகரன் 

 

இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பொதுப்பெயர் வகை ( Generic ) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளன்று ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சுதந்திர தின உரையில் கூறியிருப்பது வேடிக்கையானது. 

அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்ப மக்களின் நலனுக்காக இதயதெய்வம் அம்மா அவர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மூடிவிட்டு முதல்வர் மருந்தகம் எனும் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையுடன் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், தொட்டில் குழந்தைத் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, அம்மா உணவகம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அம்மா மருந்தகங்களையும் மூட முயற்சிப்பது திமுக அரசின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. 

ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மக்கள் நலனுக்காக எந்தவித திட்டங்களையுமே முறையாக, முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களையும் மூட துடிப்பது மக்கள் நலனுக்கு எதிரான முடிவாகும். எனவே, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மேம்படுத்துவதோடு, அதன் மூலம் ஏழை, எளிய நடுத்தர குடும்ப மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.