×

சட்டமன்ற தேர்தலில் இவர்களுடன்தான் கூட்டணி- டிடிவி தினகரன் உறுதி

 

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே அ.ம.மு.க நீடிக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஒரு அரசியல் கட்சி வெற்றி பெறுவது என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் அதை தனி நபர்கள் தீர்மானிக்க முடியாது. எடப்பாடி தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்க மாட்டேன் என்று அவருக்கு அவரே ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி மக்களுக்கான ஆட்சியை தருவோம். அதற்கான வியூகத்தை தேர்தல் நேரத்தில் அறிவீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி கூட்டணியில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்னும் நீடிக்கிறது.

ஜனநாயக நாட்டில் கட்சி ஆரம்பிக்க மாநாடு நடத்த கோட்பாடுகளை வெளியிட தேர்தலை சந்திக்க எல்லோருக்கும் உரிமை உண்டு. மக்கள் தான் அதை உற்று நோக்கி தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார்கள் அதை பற்றி நாம் கருத்து சொல்வது நாகரீகம் அல்ல. உதயநிதி ஸ்டாலின் தனது சட்டையில் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்திருப்பது தொடர்பான வழக்கை அவர் சட்டப்படி  சந்திக்க வேண்டும். அவரது கட்சி சின்னத்தை தானே வைத்திருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. இது சரியா? இல்லையா? என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். நண்பர் சீமான் அவர்கள் உணர்ச்சி மிகுதியில் கடந்த ஓராண்டாகவே அவருடைய பேச்சுக்கள் விமர்சனங்கள் அரசியல்வாதியாக நமக்கே கொஞ்சம் வருத்தப்படும் அளவிற்கு இருக்கிறது. சீமான் மறைந்த அரசியல் தலைவர்களை தரக்குறைவாக பேசுவது, மற்ற கட்சி தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்ததாக பேசுவது உண்மையில் வருத்தம் அளிக்கிறது அதை அவர் தான் சரி செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.