×

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஒன்றிணைவோம்- டிடிவி தினகரன்

 

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எத்தனை நூற்றாண்டு ஆனாலும் எம்.ஜி.ஆர் லட்சியங்கள் கொள்கைகளை கொண்டு செல்லும் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படும் என தொண்டர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஜெயலலிதா சூளுரைத்தார் அந்த வகையில் அந்த கொள்கைகளை கொண்டு செல்லும் இயக்கமாக அமமுக உள்ளது.தேர்தல் தோல்வி இருந்தாலும் கட்சி தொடங்கிய நேரத்தில் இருந்த அதே உத்வேகமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

2026இல் அதிமுக ஆட்சி என்பது கனவில் மட்டுமே நடக்கும் என தெரிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் என தெரிவித்த அவர் சுயநலம் காரணமாக பண வெறி பதவி வெறியில் முதல்வர் பதவியை பயன்படுத்தி கட்சியை கையகப்படுத்தி உள்ளார் எனவே 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார் என தெரிவித்தார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் இணைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் உள்ளோம்,ஒரு சிலர் பதவி வெறியால் ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றினைவதில் கால தாமதம் ஆகிறது. ஆனால் 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இந்த ஆட்சியை அகற்ற அனைவரும் முயற்சி செய்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும் இந்த வெள்ள பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது அரசு அதனை கவனத்தில் எடுத்துகொள்ள

வேண்டும் என தெரிவித்தார்.