×

ராமாயணத்தை எழுதியது யார் என தெரியாத எடப்பாடி பழனிசாமி பிரதமராக போகிறாரா?- டிடிவி தினகரன்

 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே  நவ நாகரீக வாழ்க்கையை வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த வெம்பக்கோட்டையில் பேசுவது பெருமையாக கருதுகிறேன். கிராமங்களை உள்ளடக்கிய வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது. கட்சியே கழகம் என்ற கொள்கையில் அண்ணா துவங்கிய கட்சி இன்று  குடும்பத்திற்கான கட்சியாக மாறியுள்ளது. நேர்மையான ஆட்சியை கொடுத்த அண்ணாவின் பெயரை கொண்டுள்ள கட்சிகள் இன்று விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து வருகிறார்கள் .


ஜாதி மாதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தை வழிநடத்தினால் மட்டுமே தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத துரோக ஏமாற்ற ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வணிக நிறுவனம் போல் கட்சியை நடத்திய காரணத்தினால் அதிமுக மீது மக்கள் அதிருப்தியடைந்தனர். அதன் காரணமாக 10 ஆண்டு காய்ந்து கிடந்த திமுகவிற்கு மக்கள் கொடுத்த வாய்ப்பை காய்ந்த மாடு கரும்பு தோட்டத்தில் பாய்ந்தது போல் ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டுள்ளது. காவல்துறை கைகள் கட்டப்பட்டு ஏவல் துறையாக மாறியுள்ளது 


23 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் போதை மருந்து கலாச்சாரத்திற்கு அடிமையாகி 5000 ரூபாய்க்கும் , 10000 ரூபாய்க்கும் கூலிப்படைகளாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை தவிர தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாததால்  ஆசிரியர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து துறையினரும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவனே மது ஒழிப்பை அமல்படுத்த மாநாடு நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டது. அதிமுக ஆட்சியில் எதற்கெல்லாம் மு.க.ஸ்டாலின் போராடினாரோ அதே கோரிக்கைகளுக்கு  இன்று போராடுபவர்களை கைது செய்கிறார். தமிழகத்தில் போராட்டம் நடத்தாத துறையே இல்லை. 

தமிழகத்தில் கூலிப்படை அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் கூலிப்படை அதிகரிக்க  திமுக ஆட்சியே காரணம். பாஜகவை திமுகவினர் வெளியே விமர்சித்து பேசுவார்கள். ஆனால் பாஜகவிடம் திமுக மண்டியிட்டு நிற்கிறார்கள், அந்த அளவிற்கு ஊழல் செய்துள்ளார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லிக்கு சென்று ரொட்டி, பிரியாணி சாப்பிட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார். ராமாணயத்தை எழுதியது யார் என தெரியாத எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக போகிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.