×

உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதல்வர் உலக முதலீடுகளை ஈர்க்க செல்வது வேடிக்கை- தினகரன்

 

உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதல்வர் உலக முதலீடுகளை ஈர்க்க செல்வது வேடிக்கை- தினகரன்

உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில, “தமிழகத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழு, அந்நாட்டில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகளிலும் அதனால் உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் பாதியளவு கூட செயல்பாட்டிற்கு வராத நிலையில் முதலமைச்சரின் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின் போது ரூ.6,100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் என முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளின் பட்டியல் நீள்கிறதே தவிர, அங்கு ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகளும், உறுதியளித்த வேலைவாய்ப்புகளும் சிறிதளவும் முன்னேற்றமின்றி அதே இடத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

அதே போல, உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விளம்பர மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களை வெளியிட தமிழக அரசு மறுக்கிறது.திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கிய நிறுவனங்களும், தொழில் தொடங்குவதாக உறுதியளித்துள்ள நிறுவனங்களும் தற்போது அண்டை மாநிலங்களை நோக்கி செல்லும் சூழல் இருப்பதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அண்மையில் தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய பிரதேச முதலமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று கோவை, திருப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இடம்பெயர திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

எனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன? அதன் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது? என்ற விவரங்களை வெளியிடுவதோடு, தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லாத வகையில், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.