×

பேருந்தில் போலீசுக்கு இலவச பயணம் என அறிவித்ததே முதல்வர் தான்- டிடிவி தினகரன்

 

முதலமைச்சரின் அறிவிப்பை நிறைவேற்றத் தவறிய காவல் மற்றும் போக்குவரத்துத்துறையின் மெத்தனப்போக்கை மறைக்க பேருந்தில் பயணம் செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நாங்குநேரியைச் சேர்ந்த காவலர் ஒருவர் மீது துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021-2022 ஆம் ஆண்டின் காவல்துறை மீதான மானியக்கோரிக்கையின் முடிவில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளில் 20வது அறிவிப்பாக இடம்பெற்ற காவலர் முதல் ஆய்வாளர் வரை கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு தற்போதுவரை அமலுக்கு வரவில்லை என்பதை தற்போதைய நிகழ்வு உறுதிபடுத்துகிறது. காவலர்களுக்கு கட்டணமில்லாப் பயணம் என்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்த முன்வராத போக்குவரத்துத்துறை, தன் மெத்தனப் போக்கை மறைக்க வேலை ரீதியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் மீது துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரைப்பது முதலமைச்சர் அவர்களையே ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

null


காவலர்களுக்கு வாரவிடுப்பு, புதிய பேருந்துகள் கொள்முதல், குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஸ்மார்ட்கார்டு, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு துறைகளின் மூலம் சட்டமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் திமுகவின் தேர்தல் அறிக்கையைப் போலவே செயல்பாட்டிற்கு வராமல் காகித அளவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவலர் மீது துறைரீதியிலான நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரையை திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r