99% வாக்குறுதி நிறைவேற்றமா? முழு பூசணியை சோற்றில் மறைக்க முயற்சி- டிடிவி தினகரன்
99 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வருவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டதாகவும் மீதமிருக்கும் ஒரு சதவிகிதம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் நிறைவேறப் போகிறது என்று பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எதிர்பார்த்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என மக்கள் புலம்பிக் கொண்டிருப்பது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் காதுகளுக்கு கேட்கவில்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் ஆட்சிக்கு வந்த பின்பும் என இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசுக்கு சில கேள்விகளை முன்வைக்கின்றேன்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை… என்ன ஆனது? ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து… என்ன ஆனது? மாணவர்கள் கல்விக்கடன் ரத்து… என்ன ஆனது? அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்… என்ன ஆனது? பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர வாக்குறுதி என்ன ஆனது? சிலிண்டர் மானியம் ரூ.100 எப்போது கிடைக்கும? பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது அமலுக்கு வரும்? உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் கிடைத்த தீர்வு என்ன? கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றி 2022ல் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி நியமனம் எப்போது?
இன்னும் மக்கள் எதிர்பார்த்த பல முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 99 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொதுவெளியில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பேசுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என அடிக்கடி பேசும் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, ஆட்சிக்கு வந்த பின் சொல்லாமலேயே செய்த சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் சொத்துவரி 150 சதவிகிதம் உயர்வு வீடுகள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வு, ஆவின் பால் பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு, பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்த முடிவு.
ஆகவே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் யாரோ எதையோ எழுதி கொடுப்பதை வாசிக்கும் பழக்கத்தை தவிர்த்துவிட்டு, இனியாவது மக்கள் முன் வைத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாகவும் நேர்மையாகவும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அதற்கான பதிலை விரைவில் தருவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.