×

மகாவிஷ்ணு  விவகாரத்தில் அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டது - டிடிவி தினகரன்

 

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறும் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி,  67 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகாவிஷ்ணு கைது செய்யப்படும் அளவிற்கு  மிகப்பெரிய தவறு அவர் ஏதும் செய்யவில்லை. ஆனால்  மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் பேசியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் தான்.  மேலும் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேவை இல்லாத நடவடிக்கை.  மகாவிஷ்ணு மீது கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது” என்று தெரிவித்தார்.  

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது.   மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக,  ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன்   பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசியிருந்தார்.  அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.