×

அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க தவறிய திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

 

ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையிலும், மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்திலும் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை முறையாக  பராமரிக்கத்  தவறிய திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.
 
அம்மா உணவகங்களை மேம்படுத்த கடந்த ஜூலை மாதம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 21 கோடி ரூபாயில் அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவோ, உணவின் தரத்தை மேம்படுத்தவோ எந்தவிதமான  நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.  எனவே, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் மையங்களாக செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதியை ஒதுக்கி ஆரோக்கியமான முறையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.