×


லஞ்ச புகாரில் சிக்கியவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதுதான் திராவிட மாடலா? - டிடிவி தினகரன் கேள்வி

 

லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையரை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 11.70 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. விதிகளை மீறி லஞ்சம் பெற்று ஆதாரங்களுடன் கையும் களவுமாக சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்கள், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட இரு வாரத்திற்குள்ளாகவே திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து திமுக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஊழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் எழும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அழகு பார்ப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என பொதுமக்கள்  கேள்வி எழுப்புகின்றனர். எனவே, லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்களை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக பிறப்பித்திருக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.