இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முடிவு கட்டுவது எப்போது ? - டிடிவி தினகரன் கேள்வி
Nov 12, 2024, 13:00 IST
எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அம்மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இன்று மீண்டும் 12 மீனவர்களை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் கடும் கண்டனத்திற்குரியது.