×

சுதந்திரத்தை பேணிகாத்து, ஒற்றுமையுடன் வாழ உறுதியேற்போம் - டிடிவி தினகரன் வாழ்த்து.. 

 

சுதந்திர தினத்தையொட்டி சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட  உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் திருநாடு விடுதலைபெற்ற இந்த இனிய நன்னாளில் நம்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பன்னெடுங்காலமாக நம்நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைந்திருந்த ஆங்கிலேயர்களை அடியோடு வெளியேற்றிட தங்களின் இன்னுயிரையும் நீத்து நாட்டிற்கு விடுதலைப் பெற்றுத் தந்த தியாகச்செம்மல்களின் நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் போற்றி வணங்குவதற்குரிய நாளே இந்த சுதந்திரத் திருநாள். 

மக்கள் அனைவரும் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்றுக்காக தன்னலம் கருதாமல், நாட்டின் நலம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு தங்களின் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தியாகச்சுடர்களை நினைவுகூர்ந்து போற்றுவது நம் அனைவரின் தலையாய கடமையாகும். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பேணிக்காப்பதோடு, சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் உறுதியேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.