கர்நாடக அரசின் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கனும் - மத்திய அரசை வலியுறுத்தும் டிடிவி தினகரன்..
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் மத்திய அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளையும், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு என்ற பெயரில் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.
ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான முக்கியமான காலகட்டத்தில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசாலும், தமிழகத்திற்கான நீரை கேட்டுப் பெற முடியாத திமுக அரசாலும் தமிழகத்தின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தின் உயிர் நாடியாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.