×

அலோசகர்கள் நியமனத்தை கைவிட்டுவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்புக - டிடிவி தினகரன்

 

சமூகநீதிக்கும் , இட ஒதுக்கீட்டிற்கும் எதிராக செயல்படுவது தான் திராவிட மாடலா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அரசுப் பணியாளர்களை புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து ஆட்சியை நடத்த முயற்சிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது - சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிராக செயல்படுவது தான் திராவிட மாடலா?

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை அரசின் அனைத்துத் துறைகளிலும் எந்தவித வரைமுறையும், வழிகாட்டுதலுமின்றி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதிலும் அச்சாணிகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தையும், திறமையையும் புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து கொள்கை முடிவுகளை மேற்கொள்ள முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் 3.5 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அரசுப் பணிக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஆலோசகர்களை நியமிப்பது சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிரான நடவடிக்கை என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஆலோசகர்களின் நியமனங்களை முற்றிலுமாக கைவிடுவதோடு, அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.