×

திமுக தலைமை மத்திய பாஜக தலைமையிடம் மண்டியிட்டு நிற்கிறார்கள்- டிடிவி தினகரன்

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆண்டிபட்டியில்  நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.


கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “தற்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பெருகி வருகிறது கடந்த 10 ஆண்டுகளாக கஞ்சா போதை பொருள் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஓட்டுக்கு ரூ.500, 1000 கொடுத்து வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படுகிறது. டிடிவி தினகரன் நின்ற தொகுதியில் எவ்வளவு பணம் செலவழித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முதல்வரின் மாப்பிள்ளை, மருமகன் எல்லாம் இங்கு வந்து உட்கார்ந்து இருந்தார்கள்.


விளையாட்டுத்துறை அமைச்சர் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இங்கு வந்து தங்குவேன் என்று கூறினார். இப்போது நான்கு மாதங்கள் ஆகிவிட்டது வந்து தங்கினாரா? டிடிவி தினகரன் ஜெயித்து விடக்கூடாது என்பதற்காக ஏழை, எளிய மக்களுக்கு 500 1000 ரூபாய் கொடுத்து இங்கு வெற்றி பெற்றிருக்கலாம். தவறானவர்கள் மார்தட்டி செல்லலாம், இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இதே தேனி மாவட்ட  மக்கள் அவர்களை திருப்பி அடிப்பார்கள் அந்த காலம் வரும். மாணவர்களுக்கு தமிழ் மகன் திட்டம் கொண்டு வருவேன் என்று கூறிவிட்டு புத்தகத்தின் விலையை ஏற்றி விட்டதோடு  மட்டுமல்லாமல் கஞ்சா போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. திமுக தலைமை மத்திய பாஜக தலைமையிடம் மண்டியிட்டு நிற்கிறார்கள். கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதால்தான் மத்திய பாதுகாப்பு அமைச்சர் வருகை தந்தார்.


திமுக நிர்வாகிகள் உடந்தையாக இருந்து கஞ்சா போதை பொருட்கள் விற்பனையாகிறது. எங்கு போதைப் பொருட்கள் பிடிபட்டாலும் அதில் திமுக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திமுக பயந்து இருக்கிறது, அவர்களது குடும்பத்தினர் ஊழல் வழக்குகளில் தப்பிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் மண்டியிட்டு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். வரும் தேர்தலில் அவர்கள் ஊழல் முறைகேட்டில் சம்பாதித்த பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2011-ஆம் ஆண்டு  தேர்தலில் எவ்வளவோ பணம் கொடுத்தும் திமுக வெற்றி பெற முடியவில்லை. அதேபோல் 2026 தேர்தலிலும் பண பலத்தால் வெற்றி பெற முடியாது” என்றார்.