தீபாவளி நாளில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க வேண்டும்- டிடிவி தினகரன்
தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
சாதி, மத பாகுபாடுகளை கடந்து ஒற்றுமை உணர்வை மக்கள் மனதில் ஏற்றும் ஒளியாகவும் இந்த தீபாவளி திருநாள் அமைய, மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.