அதிமுகவுடன் கூட்டணி இல்லை...தமிழக வெற்றி கழகம் அறிவிப்பு!
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.