ஜனவரியில் வெளியாகிறது தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்!
ஜனவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். மேலும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார். விஜயின் இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகளையும் ஈர்த்தது. இதனை தொடர்ந்து அவர் கட்சி பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியை சேர்ந்த ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு செயலாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழகத்தில் மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.