தவெக பூத் கமிட்டி மாநாட்டை 5 மண்டலங்களில் நடத்த திட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டை 5 மண்டலங்களில் நடத்த அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது கடைசி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதனிடையே நேற்று தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டை 5 மண்டலங்களில் நடத்த அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூரில் மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.