×

நீச்சல் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு கிணற்றில் குதித்த இருவர் பரிதாப பலி

 

செய்யாறு அருகே நீச்சல் கற்றுக்கொள்ள கிணற்றில் குதித்த செல்போன் கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலை ஓரம் உள்ள விவசாய கிணறு ஒன்று உள்ளது கிணற்றில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவ்வழியாக செல்ல கூடியவர்கள் கிணற்றில் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பரணி குமார் (வயது 40), குமரா (வயது 35) ஆகிய இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பரணிகுமார் மற்றும் குமரா ஆகியோர் உடன் சேர்ந்த நண்பர்களுடன் மாமண்டூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றுள்ளனர். அப்பொழுது குமரா என்பவர் நீச்சல் பழகுவதற்காக சிறுவர்கள் நீச்சல் கற்றுக் கொள்ளும் பலூனை மாட்டிக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். அப்போது குமரா என்பவர் நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கியுள்ளார். அதனை கண்ட பரணிகுமார் குமராவை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார்.

அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் மேலே வரமுடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றிலேயே மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்ட உடன் இருந்தவர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலறிந்த போலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் உயிரிழந்த இருவரையும் ஒருமணி நேரத்திற்கு மேலாக தேடி இருவரையும் சடலமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட இருவருடைய சடலத்தையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இறந்தவர்கள் குறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.