×

மாரி செல்வராஜிற்கு உதயநிதி அளித்த "குட்டி" பரிசு

 

வாழை படத்துக்காக இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பதே வாழை படத்தின் திரைக்கதை.

இப்படத்திற்காக மாரி செல்வராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் உத்யநிதி ஸ்டாலின், “படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை! ‘திரைப்படத்தின் வெற்றி’ என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் ‘வாழை’ ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.)” எனக் குறிப்பிட்டுள்ளார்.