×

"நம்ம மெரினா நம்ம பெருமை" விழிப்புணர்வு இயக்கம்- உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் "நம்ம மெரினா நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் "நம்ம மெரினா நம்ம பெருமை" என்ற கடற்கரையை தூய்மையாக பராமரித்து பாதுகாக்கும்  விழிப்புணர்வு இயக்கத்தினை சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதில் நம்ம மெரினா நம்ம பெருமை" விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கடற்கரையினை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 தன்னார்வல குழந்தைகளைப் பாராட்டி சான்றிதழ்களை உதயநிதி  வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்திற்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் உள்ள பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மிக நீண்ட மெரினா கடற்கரையினையும், பெசன்ட் நகர் கடற்கரையினையும் அழகுடனும், பொலிவுடனும் கண்காணிக்க எதுவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும். மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய நான்கு சக்கர ரோந்து வாகனம் தலா 16 இலட்சம் வீதம் 48 இலட்சம் மதிப்பில் 3 ரோந்து வாகனங்களும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 35 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர்  போன்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில்  தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ் 2  ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர்  இயந்திரங்கள் 22.80 கோடி மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது.இதன் தொடக்க நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு  மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 மணற்பரப்பை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் 2019 ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த இயந்திரங்களின் தொடர் பயன்பாடு மற்றும் தேய்மானத்தின் காரணமாக அதன் திறன் பயன்பாடு குறைந்துள்ளது. இந்த இயந்திரங்களின் முழு திறனைபெறுவதற்கு ஏதுவாக முதற்கட்டமாக 2 இயந்திரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.