பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியைப் பார்த்து பயப்படுகிறார்: உதயநிதி ஸ்டாலின்
ஜனநாயகம் காக்க முதல்வருக்கு தோள் கொடுப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நடைபெறும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவிலேயே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மாநாடு போல் நடத்தும் ஒரே கட்சி தி.மு.க.தான். இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சியை பாதுகாக்க நம் முதலமைச்சருக்கு தோள் கொடுப்போம். உடலுக்கு ரத்த அணுக்கள் போல் திமுகவுக்கு ரத்த அணுக்கள் வாக்குச்சாவடி முகவர்கள்தான். உடல் ஆரோக்கியத்திற்கு இரத்த அணுக்கள் எப்படி முக்கியமோ, அதே மாதிரி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உழைத்தால்தான் திமுக ஆரோக்கியமாக இருக்கும். வெற்றிக்காக உழைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் திமுகவின் முகம் மட்டுமல்ல. தலைவரின் முகம்.
நம்முடைய குழந்தைகளி கல்விக்காகவும், வேலைக்காகவும் திமுக உழைக்கிறது. நீட் போன்ற பல தேர்வுக்கு எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வை எதிர்த்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 3 லட்சம் கையெழுத்துகள் ஆன்லைனில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் கையெழுத்துகள் பெற வேண்டும்.
2024ல் அடிமைகளையும்,அவர்களின் எஜமானர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டியடித்து நமது தலைவர் விடியலை தரவுள்ளார். பிரதமரே நமது திராவிட நாயகனின் ஆட்சியைப் பார்த்து பயப்படுகிறார். மோடியை பார்த்தும் பயப்பட மாட்டோம். ED- யை பார்த்தும் பயப்பட மாட்டோம். சசிகலாவின் காலைப்பிடித்து ஆட்சிக்கு வந்த பழனிசாமி இப்போது மோடி, அமித்ஷாவின் கால்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் பாதம் தாங்கி பழனிசாமி. நான் கலைஞர் பேரன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மகன், நான் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். நாங்கள் சொன்ன ரூ.1000 வந்தாச்சு. நீங்கள் சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு? திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பியடிப்பதே பாஜகவின் வேலை. ஜல்லிக்கட்டு போல நீட் தேர்வு போராட்டத்திலும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.