×

அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை- சுகாதாரத்துறை

 

அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ் என்பவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியிருக்கிறார். அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல், மருத்துவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அதில் அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் தாக்குதல் நடத்துவது பிணையில் வர முடியாத குற்றமாகும். ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மருத்துவமனை பாதுகாப்புக்குழு மற்றும் வன்முறை தடுப்பு குழு அமைக்கப்படும். மருத்துவமனை பாதுகாப்புக்குழு, அரசு மருத்துவமனை டீனை தலைவராக கொண்டதாக இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.