பாரத்தை ஏற்றி துரும்பை எடுப்பது போல் தான் கேஸ் விலை குறைப்பும் - வைகோ சாடல்..
ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு, ஒரு துரும்பை எடுத்து விடுவது போல மத்திய அரசு கேஸ் விலையை குறைத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவு செய்த பின்னர், வைகோ செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “பேரறிஞர் அண்ணாவின் 115 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் செப்டம்பர் 15 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவிற்கு எழுச்சியாக மாநாடு நடத்த மதிமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அசைக்க முடியாது, இந்துத்துவா தத்துவங்கள் இங்கே கால் ஊன முடியாது.
அண்ணாமலை நடைபயணங்கள் மேற்கொள்ளலாம், அறிக்கைகள் விடலாம், செய்திகளில் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதலாம்; ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் பெரியாரும் அண்ணாவும் இயற்றிய சிந்தனை ஓட்டத்தை யாராலும் அகற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணி தான் வெற்றி பெறும். மும்பைக்கு நானும் செல்கிறேன்; எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் இந்திய கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும் தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.
கர்நாடகா அரசு நமக்கு அநீதி செய்கிறது. மத்திய அரசு ஓர வஞ்சனை செய்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசு கர்நாடகா தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தை தடுப்பதில்லை. ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு ஒரு துரும்பை எடுத்து விடுவது போல, கேஸ் விலையை ஏற்றி அதில் இருந்து 200 ரூபாய் குறைத்துள்ளனர்.
கோடநாடு கொலை வழக்கில் 4 பேர் உயிரிழப்புக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவரட்டும்.கொடநாடு கொலை வழக்கு சம்பவத்தில் குற்ற புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தீர விசாரிக்கட்டும். நீட் இறப்பிற்கு காரணமாய் இருக்கும் நீட் தேர்வினை அகற்றுவதில் திமுக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் திமுக போன்ற வலுவான கட்சிகள் இருப்பதால் இது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி குறித்து நான் திமுகவிடம் பேசவும் இல்லை. அது பற்றி நான் சிந்திக்கவும் இல்லை . தற்போது பேச்சுவார்த்தை இல்லை; திமுகவுடன் பக்க பலமாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.