×

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை! தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்- வைகோ

 

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2024-25  வரவு செலவு அறிக்கையில் உற்பத்தி, வேலை வாய்ப்புகள், சமூக நீதி ,நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 கூறுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இளைஞர்கள்,பெண்கள், விவசாயிகள், ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் கடந்த ஆறு முறை நிதியமைச்சர் தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையில் இடம் பெற்றிருந்தது தான், ஆனால் செயல்பட்டிற்கு வந்ததா என்பதுதான் கேள்விக்குறி.

இந்திய பொருளாதாரம் 6.5 முதல் 7 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்றும், பண வீக்க விகிதம் 4.5 விழுக்காடு அளவு குறையுமென்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப் படவில்லை. உணவு பணவீக்கம் 7.5 விழுக்காடாக அதிகரித்ததால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன என்பதுதான் உண்மை நிலை ஆகும். வேளாண்மை துறைக்கு 1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டு காலம் போராடிய விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் ஏற்கப்படவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஒன்றிய அரசின் பாரா முகத்தாலும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையாலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு தள்ளப்பட்டனர். உடனடியாக இவற்றிலிருந்து மீள்வதற்கு நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று மோடி அரசு தந்த வாக்குறுதிகள் காற்றிலே பறந்தன. இந்நிலையில், தற்போது ரூபாய் 2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி மட்டும் அளிக்கப்படும் என்று கூறியிருப்பதும், 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் படித்த இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது.

அசாம், உத்தரகாண்ட், சிக்கிம், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதைப்போல பீகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை  ஒன்றிய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு  போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா தாக்கம், மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வரும் கோவை மாவட்ட தொழில் துறை வளர்ச்சிக்கு திட்டங்கள் எதுவும் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.