×

இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் ஆளுநரை திரும்ப பெறுக- வைகோ

 

இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 அக்டோபர் 18 ஆம் நாள் துரோகம் இழைக்கப்பட்ட நாளாக தமிழக ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். இந்தியை எதிர்த்து இலட்சக்கணக்கானவர்கள் உயிர்த் தியாகமும், இரத்தமும் சிந்தியிருக்கிறார்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வரை எண்ணற்ற தலைவர்கள். ஆண்டுக் கணக்கில் சிறைச்சாலைகளில் இருந்திருக்கிறார்கள். தலைவர்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான தோழர்கள், இளைஞர்கள், இலட்சக்கணக்கான மாணவர்கள் 1965 மொழிப்போரில் செந்தமிழைக் காப்பதற்காகவும், இந்தியை நுழைய விடக்கூடாது என்பதற்காகவும் உறுதி எடுத்துக்கொண்டு போராடினார்கள்.

அரசியல் சட்டத்தின் 17 ஆவது அத்தியாயத்திற்கு நெருப்பு வைக்கச் சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் டாக்டர் கலைஞர் உள்பட பலரும் சிறைவாசம் ஏற்றார்கள். அரசியல் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தியதற்காக சிறையில் பூட்டப்பட்டார்கள். அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடன், சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலம் மட்டும்தான். இந்திக்கு இங்கே இடமில்லை என்று அறிவித்து பிரகடனம் செய்தபோது, ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. ஒருமனதாக அந்த மசோதா சட்டமாக நிறைவேறிற்று. அண்ணா அவர்கள் தான் மறைவதற்கு முன்பு கடைசியாக தமிழ்நாடு பெயர் சூட்டுவிழாவில் பேசும்போது, தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும்தான் ஆட்சி மொழிகளாக இருக்கும். இந்தி இருக்காது என்ற சட்டத்தை வருங்காலத்தில் யார் வந்தாலும் மாற்ற முடியாது என்பதை மனம் திறந்து தமிழ் மக்களுக்குத் தெரிவித்தார்.

1965 மொழிப்புரட்சி போராட்டத்தின் போது இந்திய இராணுவத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள். எல்லைப் பகுதிகளைக் காக்க வேண்டிய இந்திய இராணுவம், தமிழகத்துக்குள் நுழைந்து மாணவர்களையும், இந்தி எதிர்ப்பாளர்களையும் சுட்டுக் கொன்றது. ஆயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றார்கள். மொழிப் புரட்சியைப் போன்ற ஒரு போராட்டம் இந்திய வரலாற்றில் வேறெங்கும் நடந்தது இல்லை. இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தியிருக்கக்கூடிய தமிழ்நாட்டில் இன்றைக்கு இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தியின் 50 ஆவது ஆண்டு பொன்விழா என்று தூர்தர்ஷன் அலுவலகத்தில் அகந்தையும், ஆணவமும், தான்தோன்றித்தனமும் கொண்டிருக்கக்கூடிய தமிழக ஆளுநர் இரவி அவர்கள் பேசியது மட்டுமல்ல, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளைஇயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகமெங்கும் பாடப்பட்டு வருகிறது. அதில் வரும் திராவிட நல் திருநாடு என்ற சொற்களை நீக்கிவிட்டு பாட வைத்திருக்கிறார்.

நான் ஆளுநரைக் குற்றம் சாட்டுகிறேன். அப்படி என்றால், இந்திய தேசிய கீதத்தில் இருக்கக்கூடிய திராவிட உத்கல வங்கா என்பதில் உள்ள திராவிடத்தை எடுக்கச் சொல்வீர்களா? ஒருவேளை அதற்கு இதில் ஒத்திகை பார்க்கின்றீர்களா? நீங்கள் இந்த வார்த்தைகளை அகற்றச் சொன்னதற்கு மன்னிப்பே கிடையாது. இருந்தாலும் நீங்கள் பகிரங்கமாக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒன்றிய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் சொல்வேன், தமிழகத்தை பாழ்படுத்த நினைத்து திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று தமிழகத்தில் நெருப்பு உணர்வை விதைத்திருக்கக் கூடிய ஆளுநர் ஆர்.என்.இரவியை நீங்கள் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். அவர் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கன்னம் கிழிபட நேரும்; வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என்ற புரட்சிக் கவிஞரின் கவிதையைப் பாடிக் கொண்டு தமிழக வீதிகளில் இலட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு போராடினார்கள்.  ஆக, இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது எங்கள் இரத்தத்தோடு, எங்கள் உணர்வோடு கலந்தது. நானும் அரசியல் சட்டத்தை எரித்திருக்கிறேன்; சிறை சென்றிருக்கிறேன். சட்டத்தை எரித்ததற்காக அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கினார்கள். அதற்குப் பின்னரும் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்துகின்ற போராட்டத்தில் தோழர்களோடு கலந்துகொண்டு அவரும் சிறை சென்றார். டாக்டர் கலைஞர் அவர்கள் சிறைக் கூடத்தில் கம்பிகளுக்குள் இருப்பதைப் போல சிறை உடையைக் கொடுத்து உள்ளே பூட்டி வைத்தார்கள். பிறகு என்ன ஆயிற்று? கலைஞரே மீண்டும் முதலமைச்சரானார்.

தமிழகம் அருமைத் தாய்த் தமிழை நெஞ்சார போற்றி வணங்குகின்ற பூமி. இந்தியை எதிர்த்து தங்கள் ஆவியைத் துறந்த சிவலிங்கம், சின்னச்சாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி, மாயவரம் சாரங்கபாணி தங்கள் உயிர்களைக் கொடுத்து தாங்களாகவே மரணத்தைத் தழுவிய தியாக வரலாற்றுக்கு உரிய மண் தமிழ்நாடு. எனவே, இந்த அநீதியான காரியத்தைச் செய்த ஆளுநருக்கு மன்னிப்பே கிடையாது. அவரை உடனே டெல்லிக்கு அழைத்துக்கொள்ளுங்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதற்காகத்தான் இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறார் அவர் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.