×

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - வானதி சீனிவாசன்

 

தமிழக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம் பாரதம் பண்டிகைகளின் நாடு. பண்டிகைகள் இல்லாத மாதங்களே இல்லை. பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி முதன்மையானது.  மனித வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள். இன்பம், துன்பங்கள் வருவது இயற்கையானது. எவ்வளவுதான் துயரங்கள் வந்தாலும், எவ்வளவுதான் செல்வம் சேர்ந்தாலும் தவறான வழியில் அதாவது யாருக்கும் தீங்கு விளைவித்து விடக் கூடாது என்பதை நம் பாரத மண்ணில் தோன்றிய அனைத்து மதங்களும், கலாசாரங்களும் வலியுறுத்துகின்றன. 

மாநிலத்திற்கு மாநிலம் மட்டுமல்ல, மாநிலத்திற்குள்ளேயே கொண்டாடும் முறையில் வேறுபட்டாலும், தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் ஒன்றுதான். "எவ்வளவு தான் அதர்மம் தலைதூக்கினாலும், இறுதியில் தர்மம் தான் வெல்லும்" என்பதே அது. சுருங்கச் சொன்னால் 'அறம் காக்க அறம் நம்மை காக்கும்' என்பதுதான் தீபாவளி. அதர்மம் அழிந்து தர்மம் வென்ற நாளே தீபாவளி. அதனால்தான், இனிப்பு, புத்தாடை, பட்டாசு, விதவிதமான உணவுகள் என தீபாவளித் திருநாளை அவ்வளவு உற்சாகமாக கொண்டாடித் தீர்க்கிறோம்.  அதுவும் தீபாவளியின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் உற்சாகத்தை வேறு எதனாலும், யாராலும் கொடுக்க முடியாது. புதுமண தம்பதிகளுக்கு தலை தீபாவளி என்பது  திருமணம் போன்றே மகிழ்வான ஒன்று.

நம் பாரதப் பொருளாதாரம் என்பது தீபாவளி வணிகத்தை மையப்படுத்தியே உள்ளது. ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தங்கம், வைரம், வெள்ளி என ஆபரணங்கள் விற்பனை என்பது பல லட்சம் கோடியைத் தாண்டும். அறவழி வாழ்வியலை வலியுறுத்தும் தீபாவளி, பாரதப் பொருளாதாரத்தின் ஆணி வேராகவும் உள்ளது. இன்னும் 5 மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்று மாண்புமிகுப்பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைத்தது. கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொருளாதாரத்தில் பாரதம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா பேரிடரை மோடி அரசு எதிர்கொண்ட விதத்தை கண்டு வியக்காத நாடே இல்லை.