பிரதமர் மோடி தான் அரசியலில் சூப்பர் ஸ்டார்..! சீமானுக்கு வானதி சீனிவாசன் பதிலடி
சூப்பர் ஸ்டார் பட்டம் மற்றவர்கள் கொடுக்கவேண்டும் அவர்களுக்கு அவர்களே கொடுத்துக்கொள்ளக்கூடாது... தன்னை அரசியல் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்ட சீமான் குறித்த கேள்விக்கு வானதி கொடுத்த பதிலளித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் இப்பொழுதுதான் முதல்முறையாக ரஜினியுடன் தனியாக சந்தித்து இரண்டே கால் மணி நேரம் தனியாக பேசினேன். நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என்பது யாருக்கும் தெரியாது. ஒன்று நான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் அவர் சொல்ல வேண்டும். ஆனால் விமர்சனங்கள் பல வந்துள்ளது, எங்கள் சந்திப்பு பல பேருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நான் சந்தித்து இருப்பது நான் சங்கி என்றால் அவரை வைத்து ஆண்டுக்கு இரண்டு படங்களை எடுத்து பல கோடிகளை சம்பாதிப்பவர்களும் தங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளும் அவரை அழைத்து கொண்டாடுவதால் அவர்களை என்ன சொல்ல வேண்டும்? திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் அரசியலில் சூப்பர் ஸ்டார் இந்த சீமான்” என பேசினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், “சூப்பர் ஸ்டார் ப்டடம் அவரவர்களே கொடுத்துக்கொள்ள கூடாது சிறந்த தலைவர் என பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் பட்டமளிப்பதால் அவர்தான் சூப்பர் ஸ்டார். காவி நிறம் பிஜேபிக்கு சொந்தமானது அல்ல. விஸ்வகர்மா திட்டம் குறித்து திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. கைவினை கலைஞர்களின் வாழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடக்க பார்க்கிறார். சமூகநீதி பாதிக்கப்படுமென கூறி கைவினை கலைஞர்களின் வாழ்வை முடக்க முதல்வர் முயற்சிக்கிறார். அரசியல் ஆதாயங்களுக்காக விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைக்க வேண்டாம்” என்றார்.