மனு கொடுக்க வந்த மக்களை ஒருமையில் பேசி அடிக்க பாய்ந்த விஏஓ!
மயிலாடுதுறை அருகே மனு கொடுக்க வந்த மக்களை விஏஓ ஒருமையில் பேசி அடிக்க பாய்ந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிவருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவாளப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் பட்டா வேண்டி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதி விஏஓ நெப்போலியன் அந்த இடத்தை ஆய்வு செய்து வருவாய் ஆய்வாளரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் தமிழரசன், அவரது மருமகன் நவீன் ஆகியோர் தாலுகா அலுவலகம் சென்று பட்டா வழங்குவதற்கு விஏஓ நெப்போலியன் தடையாக இருப்பதாக தாசில்தார் விஜயராணியிடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாசில்தாரின் உத்தரவின் பேரில் நேற்று சர்வே துறையினருடன் சென்று அந்த இடத்தை மீண்டும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது தமிழரசன் தரப்பினர் நெப்போலியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.