×

புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்குவோம் - திருமாவளவன் அறிக்கை

 

ஆதிக்கமில்லா தேசத்தைக் கட்டமைப்போம், புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்குவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கபட்டு எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் டாகடர் இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் ஒப்படைத்தார். எனவே, நவம்பர் 26 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசமைப்புச் சட்டநாளாகக்  கொண்டாடப்பட்டு வருகிறது.  தற்போது அதன் எழுபத்தைந்தாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியதாக நாடுமுழுவதும் மக்களால்  போற்றப்படுகிறது. குறிப்பாக, இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் அரசமைப்புச் சட்ட நாளையும் (நவ-26) குடியரசு நாளையும் (சன-26) கடந்த ஓராண்டாகக் கொண்டாடி வருகின்றன.  அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு புதிய தேசத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாகும். அத்தேசத்தின் மக்களால் உருவாக்கப்படும் குடியரசுக்குரிய இறையாண்மைக்கான உயிர்மூச்சாகும். மேலும் தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கொள்கை- கோட்பாட்டுக்குரிய மூலாதாரமாகும். மண்ணையும் மக்களையும் மேம்படுத்திப் பாதுகாப்பதற்கான வலுமிக்கப் பேரரணாகும். 

அத்தகைய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைத் தேயவிடாமல், சிதையவிடாமல் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்குரியதே என்றாலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதாகும். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை அத்தகைய பொறுப்புணர்வை நம் ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுகிறது.  "இந்திய மக்களாகிய நாங்கள்" எனத் தொடங்கும் அந்த முகப்புரை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில், குடிமக்கள் ஒவ்வொருவரையும் உறுதியேற்க வைக்கிறது. ஒரு குழுவோ அல்லது ஒரு சமூகமோ அச்சட்டத்தைத் தங்களுக்கானதாக மட்டுமே உருவாக்கிக் கொண்டதல்ல; மாறாக, நிகழ்காலம் மட்டுமின்றி, இனிவரும் எக்காலமும் இந்திய குடிமக்கள் யாவரும் தங்களுக்காக உருவாக்கிக் கொண்டதே இச்சட்டமென்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை நமக்கு உணர்த்துகிறது. அத்துடன்,  அதன் அடிப்படைக் கூறுகளை நீர்த்துப்போகாமல் பாதுகாப்பதற்குரிய நமது கடமைகளையும் பொறுப்புணர்வையும் முகப்புரை  சுட்டிக்காட்டுகிறது.

அரசமைப்புச் சட்டத்தில் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்துகொள்ள இடமுண்டு என்றாலும், அதன் அடிப்படைக் கூறுகளான மதச்சார்பின்மை (secularism), கூட்டாட்சியியல்  (Federalism ), பன்மைத்துவம் (Pluralism) ஆகியவையும், அவற்றின் அடிப்படையில் குடிமக்களுக்கான  நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவையும் எத்தகைய சூழலிலும் நீர்த்துப்போகவோ அல்லது திருத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது என்பது தான் முதன்மையானதாகும். உச்சநீதிமன்றமும் ஏற்கனவே ஒரு வழக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அண்மையில், திரு. சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தொடுத்த வழக்கையும் தள்ளுபடி செய்து அடிப்படைக் கூறுகளான சமதர்மம் (Socialism) மற்றும் மதச்சார்பின்மை (Secularism) ஆகியவற்றில் கை வைக்க முடியாதென தீர்ப்பளித்துள்ளது. சனாதன சக்திகளின் முதன்மையான, அதேவேளையில் இறுதியான இலக்குகளை அடைய முடியாத நிலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படைக் கூறுகளே காரணம் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எனவே, இவற்றை நீர்த்துப்போக வைப்பதற்கு அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்தான் நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருக்குமான தவிர்க்கமுடியாத கடமையாகும். இதனை உணர்ந்தே நாம் இது தொடர்பாக தொடர்ந்து மாநாடுகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பரவலாக மக்களிடையே பரப்பி வருகிறோம். மேலும், அரசமைப்புச் சட்டநாளிலும், குடியரசு நாளிலும் முகப்புரையை  உறுதிமொழியாக ஏற்று வருகிறோம்.  அந்த வகையில், இந்த ஆண்டும் அரசமைப்புச் சட்டநாளில் தமிழ்நாடு முழுவதும் இயக்கத் தோழர்கள் ஒரிடத்தில் கூடி காலை 10. 00 மணி முதல் 12.00 மணிக்குள் மற்றும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் முகப்புரையை உறுதிமொழியாக ஏற்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.