×

தொண்டர்களுக்கு விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுரை..!

 
விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது : மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு என்பது பெண்கள் பங்கேற்கும் மாநாடு. எனவே, எந்தளவுக்கு பெண்களை அழைத்து வர முடியுமோ அந்தளவுக்கு அழைத்து வந்து அவர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும். மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி, 8 மணிக்கு நிறைவு செய்ய இருக்கிறோம். வாகனங்களை முன்பதிவு செய்வதோடு, உணவு, குடிநீர் போன்றவற்றை முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆங்காங்கே கடைகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். நம்மை பிடிக்காதவர்கள் தேவையில்லாமல் நமது நிகழ்வுகளில் ஊடுருவ வாய்ப்புள்ளது. அவர்கள் மது அருந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. நமது அரசியலை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள், நம்மைப் போல் அரசியல் செய்ய இயலாத சக்திகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு திட்டமிட்டு அவதூறு பரப்புவார்கள்.

இப்போது கூட நாம் பின்வாங்கிவிட்டதை போலவும், அவதூறு பரப்புகின்றனர். நமது நிலைப்பாட்டில் பின்வாங்கவில்லை. பூரண மதுவிலக்கும், மது ஒழிப்பு என்பதும் ஒன்றுதான். அனைத்துமே அரசியல் தான். ஆனால், மாநாட்டில் தேர்தல் அரசியல் இல்லை என்பது மட்டுமே பொருள். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாநாட்டை திசை திருப்பப் பார்க்கின்றனர். ஏதோ பேச்சுவார்த்தை நடந்தது, தனியாக சந்தித்துக் கொண்டனர், என்ன நடந்தது எனத் தெரியவில்லை என்றெல்லாம் பேசுகின்றனர்.

நடந்தவற்றை பகிர்ந்து கொண்டோம் அவ்வளவு தான். இப்படிப் பேசினால் தான் திமுக அதிக இடங்களைக் கொடுக்கும் என்று பேசுவதெல்லாம் நம்மை களங்கப்படுத்தும் முயற்சி. இதை பொருட்படுத்த வேண்டாம். கடந்து செல்வோம். திமுகவை எதிர்த்து மது ஒழிப்புக் கொள்கையை பேச வேண்டும் என்பதில்லை. திமுகவை நம்மோடு சேர்ந்து பேசவைப்பதும் ஒரு அணுகுமுறை.

மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க திமுக, அதிமுக, இடதுசாரிகள் வேண்டும் என்பது எந்த வகையில் குழப்பமான கோரிக்கையாக இருக்க முடியும்? நமது அறைகூவலை ஏற்று விசிக மாநாட்டிலேயே திமுக பங்கேற்கும் என்று சொல்லியிருப்பது அரசியலில் நேர்மையானவர்களால் பாராட்டக் கூடியது. நாம் மிரட்டி அரசியல் செய்யவில்லை. நேர்மையான அரசியலில், நேர்மையாக கோரிக்கை வைக்கிறோம்.

இதுவரை நமது நகர்வுகள் மக்கள் நலன் சார்ந்தே உள்ளது. தேசிய மதுவிலக்கு கொள்கை வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பேசாமல் திருமா இந்தக் கணக்குப் போடுகிறார். திமுக இந்தக் கணக்கு போடுகிறது. இதெல்லாம் புரட்டு என்றெல்லாம் பேசுகின்றனர். இதைப் பொருட்படுத்த வேண்டாம். நம் நோக்கம் உயர்வானது.

மக்கள் நலன் சார்ந்தது. எனவே, மாநாடு வெற்றிகரமாக நடக்க வேண்டும். எஞ்சிய நாட்களில் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதில் தோழமை கட்சிகளைச் சார்ந்த மகளிரணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும். அதன்படி தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.