×

வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பிய 3 பேர் விபத்தில் பலி- திருமா இரங்கல்

 

மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பும்போது விபத்தில் பலியான கடலூர் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் உத்திரக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகியோருக்கு வீரவணக்கம், அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த எமது இரங்கல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெல்லும் சனநாயகம் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது. நாட்டின் கவனத்தையே ஈர்த்தது. அரசியல் அரங்கையை அதிர வைத்துள்ளது. தமிழகமெங்கும் சிறுத்தைகளின் மாநாடு குறித்தே  பேச்சு. எனினும், மாநாடு முடிந்து ஒருசில மணி நேரம்கூட அந்த மகத்தான வெற்றியை எண்ணி என்னால் மகிழ்ந்திருக்க இயலவில்லை. நெஞ்சில் இடிவிழுந்ததைப் போன்று பெரும் அதிர்ச்சியளித்தது அந்த துயரச் செய்தி. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே நடந்த விபத்தில், புவனகிரி அருகேயுள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சார்ந்த இளஞ்சிறுத்தைகள்  உத்திரகுமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகிய மூன்று பேர் பலியாகி விட்டனர் என்றும் அதே வண்டியில் பயணம் செய்த இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று, விருத்தாசலம், சிதம்பரம், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் அரசு மற்றும் தனியார் ருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வந்தது. தாங்கொணா துயரம் என்னைத் தாக்கியது.   வேதனை நெருப்பு வாட்டியது.  கடும் மன உளைச்சலில் செயலிழந்துபோனேன். அத்துடன், மேலும் ஒரு துயரச் செய்தி வந்து சேர்ந்தது. நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த நமது தோழர்கள்  தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கி, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று  சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எதிரே இருசக்கர வண்டியில் நிலை தடுமாறியபடி ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் அந்த விபத்தில் பலியாகியிருக்கிறார் என்றும் வந்த தகவல் என்னை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

அதுமட்டுமின்றி,  சென்னை புளியந்தோப்பைச் சார்ந்த தோழர்களும் செங்கல்பட்டு அருகே விபத்தில் சிக்கியதில் தம்பி தாஸ் உள்ளிட்ட பலர் காயமுற்று சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தது. இவையெல்லாம் மாநாடு முடிந்து அவரவர் வீடு திரும்பும் போது ஆங்காங்கே நடந்தவையாகும். ஆனால், மாநாட்டுக்கு வரும்போது அன்று காலையிலேயே தருமபுரி அருகே விபத்து நடந்தது என்ற அதிர்ச்சி தகவல் வந்தது. அவ்விபத்தில் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று தோழர்கள் கூறினர். உயிருக்குச் சேதமில்லை என்கிற வகையில் சற்று ஆறுதலடைந்தேன். இது மாநாடு தொடங்குவதற்கு முன்னரே எனக்கு மிகுந்த கவலை அளித்த துயர தகவலாகும். மேலும், நமது மாநாட்டின் மகத்தான  வெற்றியைக் கண்டு எரிச்சலடைந்த சாதிவெறியர்கள், தஞ்சை ஒரத்தநாடு அருகே இருட்டில் மறைந்திருந்து நமது வண்டிகள் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். அதில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இரண்டு நாட்களாக இத்தகைய விபத்துகளால் நேர்ந்த உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் போன்ற பாதிப்புகளால் நான் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளேன். மீளமுடியாத பெருங்கவலையில் வீழ்ந்துள்ளேன். உயிரிழந்த தம்பிகளின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்லமுடியும்? அவர்களுக்கு நேர்ந்துள்ள இந்த பேரிழப்பை எப்படி ஈடுசெய்ய முடியும்? "பாதுகாப்பாய் வந்து பாதுகாப்பாய் வீடு திரும்ப வேண்டும்" என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்? எது நடந்துவிடக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.  இந்த நிலையில் மாநாட்டின் வெற்றியை எண்ணி எப்படி நான் மகிழ்ச்சியடைய முடியும்? இரண்டு நாட்களாக முற்றிலும் மன அமைதி இழந்து பெருந்துயரில் வீழ்ந்து குமைகிறேன். கடலூர் மாவட்டத்தில் சனவரி 26 அன்று இரவு பலியான இளஞ்சிறுத்தைகள்  மூவருக்கும் மதுரையில் மலர்த்தூவி வீரவணக்கம் செலுத்தினோம். தற்போது அந்த தம்பிகளின் திருவுடல்களுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்திட மதுரையிலிருந்து சிதம்பரம் பகுதிக்கு விரைந்து கொண்டிருக்கிறேன்.

சனநாயகத்தைக் காக்கும் 'வெல்லும் சனநாயகம் மாநாடு' என்னும் நமது மாபெரும் அறப்போரில் பங்கேற்று களப்பலியான அருமைத் தம்பிகள் மூவருக்கும் எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். பிள்ளைகளை பறிகொடுத்து பெருந்துயரத்தில் வாடும் அவர்தம் குடுத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் பலியான தம்பிகளுக்கு தமிழகமெங்கும் இயக்கத் தோழர்கள் வீரவணக்கம் செலுத்திட வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.